பயங்கரவாத தாக்குதல் புலானாய்வு தகவல்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை : விசாரணைகள் முன்னெடுப்பு - பொலிஸ்!
கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சிறைக்கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பாராளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கங்காராம பகுதி உள்ளிட்ட கொழும்பின் 7 இடங்களில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் கடந்த 05 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவானிடம் கொழும்பின் பல இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் குழுவொன்று இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பயங்கரவாதத் திட்டம் பற்றி அறிந்த பல்லேகல சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தானேகும்புர பொலிஸ் சோதனைச் சாவடியில் விபரங்கள் அடங்கிய கடிதத்தை வீசியதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான திட்டமிடல்கள், கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களின் உரையாடலைக் கேட்ட கைதி ஒருவர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிடும் குழுவினரால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த கைதி பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் இருக்கும் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் சம்பந்தப்பட்ட கைதிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பயங்கரவாதத் திட்டம் குறித்த விபரங்கள் அடங்கிய கடிதத்தை வீசியதாக கூறப்படுகிறது.
விடயம் தொடர்பில் கேட்டறிந்த கொழும்பு மேலதிக நீதவான் தொடர்புடைய பிரதேச நீதிமன்றங்களிலிருந்து இது தொடர்பில் தேவையான அனுமதிகளை பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட விருப்பதாக எச்சரித்த ஊடக அறிக்கை தொடர்பில் சபையில் அரச தரப்பின் கவனத்திற்கு கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் குண்டுத் தாக்குதல் மிரட்டல் தொடர்பாக சிறைக் கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.