வெளிநாடுகளில் மிருகங்களுக்குக் கூட பயன்படுத்தாத கதிர்வீச்சு இயந்திரமே நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது - சஜித்
நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை.
அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும்.
லினியா எக்ஸலேட்டர் என்ற கதிர்வீச்சையே பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போதுள்ள நவீன உபகரணம். ஆனால், எமது நாட்டில் கோபோல்ட் கதிர்வீச்சே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கதிர்வீச்சை வெளிநாடுகளில் மிருகங்களின் புற்றுநோய்க்கு கூட பயன்படுத்துவதில்லை.
அத்துடன், லினியா எக்ஸலேட்டர் கதிர்வீச்சு உபகரணம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனை பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இரண்டாம் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபோல்ட் கதிர்வீச்சு சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.