மீண்டும் போராட்டம் வெடிக்கும் - சஜித் எச்சரிக்கை
தற்போதைய அரசாங்கம் எல்லா சந்தர்ப்பத்திலும் மக்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றது என்றும், அதன் புதிய போக்கே சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதும்,சீர்குலைப்பதும் தடுப்பதும் என்றும்,அந்நோக்கத்திற்காக,"*நிகழ் நிலைக் காப்பு*" என்ற வார்த்தை முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் உரிமை அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஊடகங்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கான முனைப்பு நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த ஊடக அடக்குமுறையானது பயங்கரவாதம் என்பதால் இதற்கு இடம்கொடுக்கப்போவதில்லை என்றும்,இந்த ஊடக ஒடுக்குமுறைக்கும் சமூக ஊடகங்களின் கட்டுப்பாட்டிற்கும் எதிராக மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவோம் என்றும்,சமூக ஊடகங்களின் நிகழ்ச்சி நிரல்களை ஜனாதிபதி மற்றும் நாட்டின் அரசாங்கத்தின் கைகளில் எடுக்கப் போகும் இந்த முயற்சிகளில் இன்னொரு போராட்டம் உருவாகும் என்றும்,இதன் மூலம் பெரிய பதவிக் கதிரை கூட இழக்கப்படலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) தெவிநுவர மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.