சனல் 4 ஆவணப்படம் : பாராளுமன்ற தெரிவுக்குழு, விசேட விசாரணை குழு அமைக்க தீர்மானம் - ஜனாதிபதி
பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சியின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த ஆவணப்படத்தின் வெளிப்படுத்தல்களை விசாரணை செய்யாமலிருக்க இயலாது. இலங்கையின் சட்டகட்டமைப்புக்குள் முழுமையானதும் பரந்துப்பட்டதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் விசேட ஜனாதிபதி விசாரணை குழுவை நியமித்து அதனூடாக உண்மை நிலையை அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையப்படுத்தி பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல்களை விசாரணை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஓய்வுப்பெற்ற 3 அதிகாரிகள் கொண்ட விசேட விசாரணை குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பொலிஸ் தினைக்களம், சட்டமாதிபர் தினைக்களம் மற்றும் அரச சிவில் நிர்வாக சேவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் வகையில் இந்த விசாரணை குழு உருவாக்கப்பட உள்ளது. பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.