ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்பில்லை என கோத்தபய ராஜபக்சே மறுப்பு
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் தின பண்டிகையின்போது நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 270 பேர் பலியாகினர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைய செய்தது.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்தபோதும், குண்டுவெடிப்பை தடுக்க தவறியதாக அப்போதைய இலங்கை அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இது இலங்கையில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுத்தது.
இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து செய்தி நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டை இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 2019 ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலங்கை செய்தி நிறுவனத்தின் ஆவணப்படம் பொய்களின் திணிவு ஆகும். என்னை ஜனாதிபதியாக்க பயங்கரவாதிகள் குழு தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறுவது அபத்தமானது என்றார்.