கொழும்பிலுள்ள தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.
சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.
குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்
இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.
தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.
நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.
தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.அவர்கள் மகிழ்ச்சியடையும்.
குருந்தூர் மலை குறித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் எந்தளவுக்கு நியாயமானது என்பது தர்க்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குருந்தூர் விகாரையின் விகாராதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.
குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன என்றும் கூறினார்.