கொக்கேயினுடன் பிலிப்பைன்ஸ் பிரஜை கைது
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கேயின் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிலிப்பைன்ஸ் பிரஜையிடமிருந்து போதைப் பொருளை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிலோ 294 கிராம் கொக்கேயினுடன் பிலிப்பைன்ஸ் பிரஜை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக குறித்த விடுதிக்கு காரில் வந்த நபர் ஒருவரும் 07 இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள முக்கிய போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 28 வயதான பிலிப்பைன்ஸ் பிரஜை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபர் கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.