இலங்கையின் எந்த மூலைமுடுக்கிலும் தமிழ் மொழியை யாரும் உதாசீனம் செய்ய முடியாது : அசீஸ்
இலங்கை அரசியல் யாப்பில் மொழி உரிமை பற்றி நான்காம் அத்தியாயத்தில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அதன்படி இலங்கையின் எந்த மூலைமுடுக்கிலும் தமிழ் மொழியை யாரும் உதாசீனம் செய்ய முடியாது.
இவ்வாறு கல்முனையில் இடம் பெற்ற சமூக உரிமைப்பாடு இரண்டாம் மொழி கல்வியின் முக்கியத்துவம் மொழிக் கொள்கை பற்றிய இறுதி நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.எம்.அசீஸ் தெரிவித்தார்
மனித அபிவிருத்தித் தாபனம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக கனடா அரசின் அனுமதியுடன் ஐந்து வருட வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செய்திட்டத்தின் ஒரு அங்கமாக சகவாழ்வு சங்கங்கள் ஊடாக ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வையும் கருத்துக்களத்தையும் நேற்று முன்தினம்(13) வியாழக்கிழமை மாலை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்தது.
கல்முனை கிரிஸ்டா இல்லத்தில் தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியால் தலைமையில் இந்த இறுதி அமர்வு இடம் பெற்றது.
அங்கு சிறப்பு பேச்சாளர்களாக மனித அபிவிருத்தி தாபனத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா சிங்கள மொழி ஆசிரிய ஆலோசகர் ஸ்ரீஸ்கந்த ராஜா ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் ஸ்தாபகர் களின் அச்சாணியாக திகழ்ந்து புதனன்று இறையடி சேர்ந்த அமரர் பொன்னையா( கண்டி) அவர்களுக்கு இரண்டு நிமிடம் ஆத்மசாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.