காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.
சீமா ஹைதருக்கு பப்ஜி என்ற கேமிங் செயலி மூலம் டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (22) என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இதை தொடர்ந்து சீமா ஹைதர் தனது குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
கிரேட்டர் நொய்டாவை அடைந்து அங்கு சச்சினுடன் வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் பெண்ணான சீமா ஹைதரின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் இருந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தலையிட வேண்டும் என்று குலாம் ஹைதர் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுகோள் விடுத்து உள்ளார். பப்ஜி கேமிங் செயலின் மூலம் இந்தியாவுக்கு வருமாறு தனது மனைவியை சச்சின் மீனா ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குலாம் ஹைதர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு நரேந்திர மோடி அரசாங்கத்திடம் வேண்டுகோள் வைத்து உள்ளார். குலாம் ஹைதர் இந்திய ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளார். அவர்கள் உதவியால் தான் தனது மனைவி குழந்தைகள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடிந்தது என கூறி உள்ளார். பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் சீமா ஹைதருக்கும், டெல்லி கிரேட்டர் நொய்டா ரபுபுராவைச் சேர்ந்த சச்சின் மீனாவுக்கும் பப்ஜி கேம் செயலியில் விளையாடும்போது பழக்கம் ஏற்பட்டது.
வீடியோகால் மூலம் நெருக்கம் அதிகரித்த பிறகு, சீமா பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக மே 13 அன்று இந்தியா வந்தார். நான்கு குழந்தைகளுடன் ரபுபுராவை அடைந்த சீமா, அம்பேத்கர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து சச்சினுடன் வாழத் தொடங்கினார். இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவந்ததும், சீமா தனது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினுடன் தலைமறைவானார்.
போலீசார் அரியானாவில் உள்ள பல்லப்கரையில் அனைவரையும் கைது செய்தனர். சச்சின், அவரது தந்தை நேத்ரபால் மற்றும் சீமா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகளின் இளம்வயது காரணமாக அம்மா சீமாவுடன் அவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
சீமா ஹைதர் மற்றும் சச்சின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது காதல், நான்கு குழந்தைகள் மற்றும் சீமாவின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
சீமா மற்றும் சச்சினிடம் இருந்து 3 ஆதார் அட்டைகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் . இந்த ஆதார் அட்டைகள் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டைகள் சீமா சச்சினின் மனைவி என்று திருத்தப்பட்டு உள்ளது.
சச்சின் மற்றும் சீமாவின் வழக்கறிஞர் ஹேமந்த் கிருஷ்ண பராஷர் கூறுகையில், தற்போதைய முகவரியை மாற்ற வேண்டாம் என்று சீமா ஹைதருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமாவின் தற்போதைய முகவரி, ரபுபுராவில் உள்ள சச்சினின் வீடு என ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வழக்கு முடியும் வரை அல்லது நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை சீமா ஹைதர் சச்சின் வீட்டில் இருக்க வேண்டும்.
சச்சினும் சீமாவும் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். இருவரும் நேபாளம் காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சீமா நேபாள எல்லையில் இருந்து ரபுபுராவுக்கு வந்தார். அவள் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. முதலில் சச்சினின் தந்தைக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், பின்னர் சச்சின் மற்றும் சீமா ஹைதருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.