வாடிக்கையாளர்கள் போல் வந்து கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் வரும் 3 ஆயிரம் சதுர அடி அளவுகொண்ட கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பட்டு சேலை விற்பனை கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகளும் வணிக நிறுவனங்களும் காஞ்சிபுரம் நகரப் பகுதியில் மூடப்பட்டது.
மூடப்பட்டிருந்த பட்டு சேலை கடைகள், துணிக்கடைகள் போன்ற கடைகளின் பின் பக்க கதவை திறந்து வைத்து பொதுமக்களை அனுமதித்து வியாபாரம் செய்துவந்தனர். தகவலறிந்த வருவாய்த் துறையினரும் பெருநகராட்சி நிர்வாகத்தினரும் காந்தி சாலை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பின்பக்க கதவை திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்த கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.
பின்பக்க கதவை திறந்து வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை மீறி பொதுமக்களை அதிக அளவில் அனுமதித்து வியாபாரம் செய்து வந்த பிரபல துணிக்கடைக்கு அபராதம் விதித்து வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைத்தனர். வருவாய் துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வின் காரணமாக காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.