காலாவதியான விதிகள் மற்றும் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும் : பிரதமர்
காலாவதியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், காலாவதியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பதன் காரணமாக ஏற்படும் குறைபாடுகள் கூட்டுறவு இயக்கத்தின் உயிர்வாழ்விற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றார்.
பரஸ்பரப் பகிர்வு, விநியோகம், வரலாற்றுத் தன்னிறைவு பெற்ற கிராமக் கருத்தைப் பாதுகாத்தல் போன்ற ஒவ்வொரு பணியிலும் கூட்டுறவு இயக்கத்தின் தற்போதைய கொள்கைகள் மேலோங்கி இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கூட்டுறவு இயக்கம் 100 வருடங்களுக்கு முன்னர் பல்வேறு துறைகளில் தோற்றுவிக்கப்பட்டது என்றும், கூட்டுறவு என்பது தனித்து நிற்கும் திறன் கொண்டது என நம்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே விதிகள் மற்றும் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு, இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல கூட்டுறவுத் தலைமையை அனுமதிக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.