தாய்லாந்தில் நகரும் நடைப்பாதையில் பெண்ணின் கால் துண்டிப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள டான் மியுயங் விமான நிலையத்துக்கு 57 வயதான தாய்லாந்து பெண் பயணி ஒருவர் வந்தார். அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக அவர் வந்திருந்தார்.
விமான நிலையத்தில் நகரும் நடைபாதை உள்ளது. அதில் அவர் சூட்கேசுடன் சென்றார். நகரும் நடைபாதை முடிவடையும் இடத்தில் போட்டிருந்த தட்டுகள் திடீரென உடைந்ததால், அதனுள் அவரது இடது கால் சிக்கிக்கொண்டது. அவர் செய்வதறியாமல் திகைத்தார். கத்தி கூச்சலிட்டார்.
அங்கு வந்த ஊழியர்கள் அவரது காலை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியாக மருத்துவ குழு வந்தது. வேறு வழியில்லாததால், முழங்காலுக்கு கீழே அப்பெண்ணின் இடது கால் வெட்டி எடுக்கப்பட்டது.
அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு வெட்டப்பட்ட காலை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதனால், வேறு மருத்துவமனையில் முயன்று பார்க்குமாறு அப்பெண் கேட்டுக்கொண்டார்.
அவரது மருத்துவ செலவுகள் அனைத்தையும் விமான நிலைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்று விமான நிலைய இயக்குனர் காருண் தணகுல்ஜீராபத் கூறினார். இதர இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் பேசத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.