அஸ்வெசும’ நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் நாமல் அதிருப்தி
அரசாங்கத்தின் புதிய சமூக நலத்திட்டமான அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், யார் மிகவும் தகுதியானவர் என்பதைத் தீர்மானிக்க சரியான ஆய்வுக்கு நாமல் அழைப்பு விடுத்துள்ளார்.
”தகுதியான பெறுநர்களைத் தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது ஏற்கனவே சமுர்த்தியைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியுள்ளது. அநீதிக்கு ஆளான சமுர்த்தி பெறுனர்களுக்கு உதவுவதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன்” என்றார். ‘அஸ்வெசும’ திட்டம் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிரச்சினையாக மாறக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
“அஸ்வெசும பிரச்சினையை கையாளும் போது அரசியல் சார்புகளுக்கு அடிபணியாமல், மனிதாபிமான கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்,” எனவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.