குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர்
பேராதனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பிரசவித்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மரணத்தில் ஏதேனும் தவறிழைக்கப்பட்டிருந்தால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பேராதனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த தாயொருவர், தவறான மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போது இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மருந்துகளை நான் இறக்குமதி செய்யவில்லை. எனவே அது தொடர்பான தொழிநுட்ப காரணிகளை என்னால் விளக்க முடியாது. எனவே தான் விடயத்துடன் தொடர்புடைய வைத்தியர்களை உரிய விளக்கத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்திருக்கின்றேன். அண்மையில்பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் பதிவான மரணத்துக்கு குறிப்பிட்டவொரு மயக்க மருந்து காரணமெனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் குறித்த மருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுவர்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஒரு சிலர் குறிப்பிடும் காரணிகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான விடயங்களை அவதானிக்க முடியாது. பல கோணங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே பேராதனை வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.