வடக்கு மாகாணம் தயாராக இருக்க வேண்டும்-யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற வடமாகாண கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் , தற்போதைய கொரோனா நிலைமையில் யாழ் மாவட்டத்தைப் பொருத்த வரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அபாயமான நிலைமையினை எந்த நேரமும் எதிர்கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
யாழ் மாவட்ட மக்கள் இக்கட்டான நிலைமையை கடந்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
ஏற்கனவே அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்.
பொதுமக்கள் தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யலாம் எனினும் தற்போதைய நிலையில் அரசானது பாரிய முடக்க நிலை அறிவிக்காது எனக் கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்காத வண்ணம் ஒரு அசௌகரியத்தை எதிர்கொள்ளாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி செயற்படல் நல்லது. ஆகவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.