ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் :சஜித் பிரேமதாச
சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டிருந்தார்.
இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டமொன்று அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால், இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது ஊடக நிறுவனங்களிடம்தான் காணப்பட வேண்டுமே ஒழிய, அரசாங்கத்திடம் இருக்கக்கூடாது.
இவ்வாறான சட்டங்கள் நாட்டுக்கு அவசியம் என்றாலும், இதன் அதிகாரங்கள் ஊடக நிறுவனங்களிடம்தான் காணப்பட வேண்டும்
ஊடகவியலாளர்களின் பங்கு பற்றலுடன்தான் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். இது சுய ஒழுங்குப்படுத்தல் செயற்பாடாக இருக்க வேண்டும்.
சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு சுய ஒழுங்குறுத்தல் ஒன்றை கொண்டுவருவதுதான் சிறப்பாக அமையும். இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஊடாக, அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொள்ள முற்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த விடயம் தொடர்பாக அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி ஒரு நவீன ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.