கடந்த வருடம் 3 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன - விவசாய அமைச்சர்
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று தெரிவித்த அமைச்சர், ஹெக்டெயார் ஒன்றில் அதிகளவான அறுவடையை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப முறைமைகளை கண்டறியும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி தற்போது மீண்டும் விவசாய நிலத்திற்கு வந்து தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வன விலங்குகளால் விவசாயத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்படுகின்றது. கடந்த வருடம் மாத்திரம் 03 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன. ஆனால் இதுபற்றிப் பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய அமைச்சிடம் இது வரை குரங்குகளின் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் உலக நாடுகளில் விலங்குகள் பெருகியபோது அவற்றைக் கொன்று விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே, அனைவரும் சேர்ந்து கலந்துரையாடி இதற்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.