பிரபல பாடகர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பு
அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் ராப் இசை பாடகராக இருந்தவர் பிக் போகி (வயது 45). அவர் பியூமோன்ட் நகரில் நடந்த கச்சேரி ஒன்றில் மேடையில் ராப் பாடல்களை பாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டது.
பிக்போகி மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சுற்றியிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துணை மருத்துவர்கள் அவருக்கு சி.பி.ஆர். சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், மேடையில் அவர் மயங்கி விழுந்ததும் உயிரிழந்துள்ளார் என மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
போகி மரணம் அடைந்ததற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. மில்டன் போவல் என்ற இயற்பெயரை கொண்ட போகியின் மறைவால், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தீவிர ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். கடந்த 1999-ம் ஆண்டு தி ஹார்டஸ்ட் பிட் இன் தி லிட்டர் என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
அதன்பின்னர் அவர் பல்வேறு ஆல்பங்களை தனிப்பட்ட முறையிலும், கூட்டாக இணைந்தும் வெளியிட்டு உள்ளார். அவரது மறைவுக்கு சக ராப் பாடகர்களான பன் பி, பால் வால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.