தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் : சஜித் பிரேமதாச
தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே இனியாவது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்று நாட்டுக்கு நன்மை பயக்கும் உடன்படிக்கையை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை நடத்தும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவே முதன் முதலில் முன்வைத்தன. எனினும் தற்போதைய அரசாங்கம் தாமதமாகச் சென்று நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையிலும் பலவீனமான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொறுப்பற்ற செயற்திட்டத்தினால் பாரிய பாதகமான நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி, நாட்டை வங்குரோத்தடையச் செய்த கொள்ளையர்களை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சுகபோகம் அனுபவிக்க இடமளித்து, தாமும் சுகபோகம் அனுபவித்து சர்வதேச நாணய நிதியத்துடன் தோல்வியுற்ற ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.
அதன் பிரதிபலனை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். இனியும் பொய் கூறுவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்.
நாடு இழந்த வளங்களையும், அவற்றை கொள்ளையடித்த கொள்ளையர்களையும் இனங்கண்பதற்கு ஊழல் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏன் நேர்ந்தது? அது குறித்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு வெள்ளிக்கிழமை ( பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. இதன் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.