ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 ஆம் ஆண்டில் தாம் பிரதமராக பதவி வகித்தபோது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் 2023 இலும் அதனை பற்றி பேசிக்கொண்டிருப்பது கவலைக்குரியதெனவும் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை ஒருபோதும் தாமதப்படுத்தக்கூடாது என்பதோடு, அதனை துரிதப்படுத்துவதற்கு நிகரான பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது டிஜிட்டல் பெயர் பலகைக்கு ஒளியூட்டி, டராஸ் தலைமையகத்தை உத்தியோகபூர்வமாக திறத்துவைத்த ஜனாதிபதி, கட்டிடத்தொகுதியை பார்வையிட்டதன் பின்னர் அதன் பணிப்பாளர்கள் குழுவுடனும் கலந்துரையாடினார்.