முதியோரின் ஓட்டுக்களால் அலறும் தி.மு.க
தமிழகத் தேர்தலில் பதிவாகும் தபால் ஓட்டுகளில் திமுக எப்போதுமே மிகுந்த அக்கறை காட்டும். தீவிர கவனமும் செலுத்தும். ஏனென்றால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் திமுகவிற்கு வாக்களிப்பது உண்டு. இதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.
இதனால்தான் எப்போதுமே, தபால் ஓட்டில் திமுக முன்னிலை என்ற தகவலை திமுக ஆதரவு டிவி சேனல்கள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பாகவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும். அதேநேரம் 2011, 2016 தேர்தல்களில் மின்னணு எந்திர ஓட்டில் பின்னிலை என்ற நிலைதான் திமுகவுக்கு ஏற்பட்டு உள்ளது.
கடைசி நேரத்தில் இழுபறி வந்தால் பல நேரங்களில் திமுகவுக்கு இந்த தபால் ஓட்டுகள் கைகொடுத்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 5 லட்சம் பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். இந்த ஓட்டுகளில் சுமார் 70 சதவீதம் தங்களுக்கு கிடைத்துவிடும் என்று திமுக நம்புகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கும் தபால் ஓட்டுப் போட தேர்தல் கமிஷன் இம்முறை அனுமதித்தது. சுமார் 2 லட்சம் பேர் இப்படி தபால் ஓட்டு போட்டு இருப்பதுதான் திமுகவினருக்கு பெருத்த கவலையையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீட்டுக்கு தபால் வாக்கு சீட்டை எடுத்துச்சென்ற அரசு அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுகளை பதிவு செய்திருப்பார்களோ என்ற பலத்த சந்தேகம்தான் இதற்கு காரணம்.
என்னதான் அரசு ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக தபால் வாக்கு போட்டிருந்தாலும்கூட 80 வயதுக்கு மேற்பட்டோரின் தபால் ஓட்டுகள், தொகுதியின் தேர்தல் முடிவுகளை மாற்றி விடுமோ என்றும் திமுக கவலைப்படுகிறது.
இதுபோன்ற பயம் தேர்தல் நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பாகவே, திமுகவிற்கு வந்துவிட்டது. அப்போது மாவட்டசெயலாளர்கள் மற்றும் கட்சியின் வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் திமுக அமைச்சர்கள் அனைவரும், 80 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்யும் தபால் ஓட்டுகள் குறித்து நமது கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், முறைகேடுகள் நடக்காமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கினர்.
இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தங்கள் தொகுதியில் எத்தனை பேர் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பித்துள்ளனர், என்ற தகவல் திமுகவினருக்கு கடைசியாகத்தான் கிடைத்திருக்கிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் தபால் ஓட்டு போட்டனர் என்ற சரியான கணக்கும் கூட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த பிறகே திமுகவினருக்கு முழுமையாக தெரிய வந்துள்ளது. தபால் ஓட்டுப் போட்ட முதியவர்களின் பின்னணி பற்றி அறிந்து திமுகவினர் பீதியடைய தொடங்கியிருக்கிறார்கள்.