உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில்
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு ப் பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்ற 10ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த சேவையாற்றிய ஆசிரியர் விருது மற்றும் சிறந்த சேவையை ஆற்றிய சிறந்த பாடசாலை, பிராந்திய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகங்களும் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டதுடன், 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களும் வழங்கப்பட்டன.
14 ஜனாதிபதி சுற்றாடல் முன்னோடிப் பதக்கம் வென்ற அரலகங்வில விலயாய தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக விருது பெற்றதுடன், அதிகூடிய ஜனாதிபதி பதக்க வெற்றியாளர்களை (25) உருவாக்குவதற்கு வழிகாட்டிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மத்திய மாகாண அலுவலகம் சிறந்த அலுவலகத்திற்கான விருதை வென்றது. வைபவத்தின் இறுதியில் ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இதன்போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களிடம் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான செய்தியை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சுற்றாடல் முன்னோடியின் கடமை பெரும் தியாகம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.