பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவு
கர்நாடகத்தில் கொரோனா தனது 2-வது அலையை வீச தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரெயில், பஸ் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பெயர், செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் 3 ஆயிரம் பேர் தலைமறைவாக உள்ளதாக மந்திரி ஆர்.அசோக் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.