பொலன்னறுவை மக்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர்
கம்பஹா நிட்டம்புவவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலை போராளிகள் என அழைக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டமைக்காக கம்பஹா பிரஜை என்ற வகையில் பொலன்னறுவை மக்களிடம் மன்னிப்பு கோருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
போராளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களைக் கொல்லவும் வீடுகளை எரிக்கவும் விரும்புவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
போராட்டம் என்ற பெயரில் கொலைகள், உடைமைகள் எரித்தல் மற்றும் தாக்குதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
நேற்று (29) பொலன்னறுவை, ஹிகுரக்கொட, தாருக மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வீட்டு உரிமை உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு ஹிகுரக்கொட பிரதேச செயலகத்தினால் 197 பயனாளிகளுக்கு காணி உரிமைப் பத்திரங்களும் 43 பயனாளிகளுக்கு காணி ஒதுக்கீடு பத்திரங்களும் வழங்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பொலன்னறுவை சி.ஐ.சி. வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 86 பயனாளிகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களும், 12 பயனாளிகளுக்கு " உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியில் வீட்டுதவிகளும் வழங்கப்பட்டன.