கொரோனாவின் 3வது அலையை எதிர்க்கொள்ள தயாராவோம்: நிதின்கட்கரி
மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று உறுதியளித்தார்.
இந்தியாவில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து பேசிய அவர், படுக்கைகளை அதிகரிக்க அவசர தேவை உள்ளது என்றும், கொரோனாவின் மூன்றாவது மற்றும் நான்காவது அலை நாட்டைத் தாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவது கொடிய வைரஸை திறமையாக எதிர்த்துப் போராட உதவும் என்று அவர் கூறினார்.
கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பு காரணமாக ரெம்டெசிவிர் தேவை அதிகரித்து வருவதால், ஜெனெடெக் லைஃப் சயின்சஸ் இன்று முதல் வர்தாவில் மருந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று கட்கரி கூறினார். அந்த நிறுவனம், ஒரு நாளைக்கு 30,000 ஊசிகளை உற்பத்தி செய்யும் என்றார்.
கொரோனா சிகிச்சையில் டாக்டர்களால் ரெம்டெசிவிர் ஊசி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்களில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர், விதர்பாவின் பிற மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் தேவைக்கேற்ப ஊசி விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.