நடிகை ஸ்ரீப்ரியாவை கண்டித்த கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யத்தில் சலசலப்பு
2021 தமிழக தேர்தலில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? என்பது பற்றி தங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு அதுபற்றி விவாதித்தும் விட்டனர்.
ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் நடந்து முடிந்த ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு அடுத்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே இந்த கள ஆய்வை மேற்கொண்டு விட்டன.
ஆய்வில் கடைசியாக களம் இறங்கி இருப்பவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன்.
சென்னையிலும், அதன் புறநகர் தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்களை கட்சி அலுவலகத்திற்கே வரவழைத்து கமல் கருத்து கேட்டிருக்கிறார். சிலரிடம் ஆன்லைன் மூலமாக எழுத்துப்பூர்வ அறிக்கையும் பெற்றிருக்கிறார்.
அப்போது, தனக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள நடிகையும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான ஸ்ரீபிரியாவிடம், நீங்கள் இன்னும் முழு முயற்சி எடுத்து இருந்தால் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் கடைசி நேரத்தில் சரிவர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டதாக நம்மவர்கள் குறை கூறுகின்றனர். குறிப்பாக குடிசைப் பகுதிகளில் நீங்கள் ஆர்வத்துடன் ஓட்டு சேகரிக்கவில்லை என்ற புகார்கள் அதிகமாக வந்துள்ளது” என்று கூறி கண்டித்தாக தெரிகிறது.
தன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்ரீபிரியா கண்கலங்கி போய் இருக்கிறார். இதேபோல் கவிஞர் சினேகனையும் கமல் சற்று கடினமாக கடிந்து கொண்டுள்ளார்.
அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சந்தோஷ் பாபு, தாம்பரம் வேட்பாளர் சிவ. இளங்கோ, மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா ஆகியோர் முழுவீச்சில் பிரச்சாரம் செய்ததற்கு கமல் பாராட்டும் தெரிவித்துள்ளார்.