
ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுரை
நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நுவரெலியா நகர அபிவிருத்தி தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலா திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று பலர் நினைத்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் வாயிலாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றியுள்ளதென சுட்டிக்காட்டினார்.