நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள் - சஜித் பிரேமதாச
இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதை பரிசீலித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தாலும், அரசாங்கம் தனக்கு விசுவாசமான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவை சவாலுக்குட்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.