இந்தியாவுக்கு முழு அளவிலான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது - ஜோ பைடன்
இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆகியிருக்கிறது.
இதனால் மருத்துவத்துறை திணறி வருகிறது. உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, பிரதமர் மோடியுடன் நிறைய விசயங்களை பேசியுள்ளேன். கொரோனாவுக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் மற்றும் குணமடைய உதவும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளை வழங்குவது உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் முழு அளவிலான தொடர்ச்சியான உதவிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பி வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்கு தேவையான இயந்திர பாகங்களையும் நாங்கள் அனுப்பி வைத்து வருகிறோம். இந்தியாவுக்கு தடுப்பூசிகளை எப்பொழுது எங்களால் அனுப்பி வைக்க முடியும் என்பது பற்றியும் இந்திய பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளேன்.
நாங்கள் தொடக்க காலத்தில் சிக்கலில் இருந்த தருணத்தில் இந்தியா எங்களுக்கு உதவி செய்தது என பைடன் குறிப்பிட்டு பேசினார்.