
மைத்திரியின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டை வலுவிழக்கச் செய்யக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அருட்தந்தை சிறில் காமினி மற்றும் தாக்குதலுக்கு ஆளான ஒருவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த தனிப்பட்ட முறைப்பாடை தாக்கல் செய்திருந்தனர்.