ஈரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்
ஈரானில் குறைந்தபட்சம் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதை இறுதியாக ஒப்புக்கொண்டார். எந்தவொரு பள்ளி மாணவியும் உயிரிழக்கவில்லை. ஆனால் டஜன் கணக்கானவர்கள் சுவாசப் பிரச்னைகள், குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"அனைத்துப் பள்ளிகளும் குறிப்பாக பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட வேண்டும் எனச் சிலர் விரும்புவது தெளிவாகிறது," என்று இரானின் துணை சுகாதார அமைச்சர் யூன்ஸ் பனாஹி பிபரவரி 26ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இதுவரை வெளியாகியுள்ள ஒரே அதிகாரபூர்வ அறிக்கை, விஷம் வைத்தவர்கள் மீது குற்றவியல் விசாரணையை வழக்கறிஞர் ஜெனரல் தொடங்கியுள்ளதாகவும் இந்தச் செயல் 'வேண்டுமென்றே' செய்யப்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக, பள்ளி மாணவிகள் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு டேஞ்சரின் அல்லது அழுகிய மீன் வாசனை இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
"பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள் ராணுவ தரம் கொண்டவை அல்ல, அவை பொதுவிலேயே கிடைக்கின்றன. மாணவர்களுக்கு எந்தவிதத் தீவிர சிகிச்சையும் தேவையில்லை. அமைதியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் பனாஹி கூறினார்.
மத நகரமான கோம் விஷம் வைக்கப்பட்ட இந்த நிகழ்வின் மையமாக உள்ளது. ஆனால், இரான் முழுவதும் 8 நகரங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளன. இதுகுறித்த பொதுமக்களின் அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.