புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் - உக்ரைன் அதிபர்
உக்ரைனின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு ரஷியா ஏவுகணை தாக்குதல்களை தொடுத்து வருகிறது. எனினும், முக்கிய பகுதிகளை கைப்பற்றினாலும் அவற்றை உக்ரைன் மீண்டும் தன்வசப்படுத்தி வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர். முக்கிய கட்டிடங்களும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளன.
போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இதற்கு முன் வெளியிட்ட ஒரு செய்தியில், போரில் முன்களத்தில் உள்ள ரஷிய வீரர்கள் கதறியபடியும், அழுதபடியும் காணப்பட்ட வீடியோக்களால், புதினின் நெருங்கிய கூட்டாளிகளிடையே வருத்தம் அதிகரித்து வருகிறது என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நியூஸ் வீக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில், இந்த போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அதுபற்றி 'இயர்' என்ற பெயரிலான ஆவண படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். அவர் கூறும்போது, ரஷிய அதிபரின் தலைமைத்துவத்தில் பலவீனம் ஏற்படும் காலம் வரும். அதிபர் புதினுக்கு எதிராக அவருடைய நம்பிக்கைக்கு உரிய நண்பர்களே செயல்படுவார்கள் என அந்த ஆவண படத்தில் ஜெலன்ஸ்கி கூறும் தகவல் இடம் பெற்று உள்ளது.