கொரோனா காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் டெல்லி கேப்பிடல் வீரர்?
டெல்லி கேப்பிடல் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது கொரோனா அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் இல்லை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
போட்டிகள் நடைபெற்று வருகின்றன நிலையில் போட்டியை காண்பதற்கு ரசிகருக்கு அனுமதி இல்லை என்ற போதும் இந்த கஷ்ட காலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் குடியிருக்கும் அஸ்வின் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 2021 ஐபிஎல் தொடரில் இருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன் கொரோனா வைரசுக்கு எதிராக தன்னுடைய குடும்பத்தார் போராடி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுடன் இருப்பது அவசியம் அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் இணைவேன் என எதிர்பார்க்கிறேன் நன்றி டெல்லி கேப்பிடல் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) காயம் காரணமாக விலகினார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என ராஜஸ்தான் அணியில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டனும் (Liam Livingstone) விலகினார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட்டும் (Josh Hazlewood), இதே காரணத்தைக் கூறி ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார், காயம் காரணமாக தமிழக வீரர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த நடராஜனும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.