முழு அரசு மரியாதையுடன் ஒடிசா மந்திரியின் உடல் தகனம்
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்தவர், நபா கிஷோர் தாஸ் (வயது 61). ஜார்சுகுடா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் சரமாரியாக சுட்டார். இதில் படுகாயமடைந்த அவர் புவனேஸ்வர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு மனநல பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாசின் உடல் புவனேஸ்வரில் இருந்து நேற்று காலையில் ஜார்சுகுடாவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷிலால் மற்றும் மாநில மந்திரிகள் கிஷோர் தாசின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலையில் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் அவரது உடல் வைக்கப்பட்ட சிதைக்கு அவரது மகன் பிஷால் தாஸ் தீ மூட்டினார். முழு அரசு மரியாதையுடன் நடந்த இந்த இறுதிச்சடங்கில் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். கிஷோர் தாசின் மரணத்தையொட்டி மாநிலத்தில் 3 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் பட்டப்பகலில் அரசு நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.