போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் - குரோஷியா அதிபர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 341-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது உக்ரைனுக்கு அதிநவீன ராணுவ டாங்கிகளை வழங்க மேற்கத்திய நாடுகள் முன்வந்துள்ளன. இதனால், போர் மேலும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் உறுப்பினரும், ஐரோப்பிய நாடுமான குரோஷியாவின் அதிபர் ஷொரன் மிலனொவிக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அதிநவீன ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்த அதிபர் மிலனொவிக், வழக்கமான போரில் ரஷியாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம். உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நான் எதிர்க்கிறேன். ஆயுதங்களை வழங்குவது போரை நீட்டிக்கும். இதன் நோக்கம் என்ன? ரஷியாவை சிதைப்பதா?, ரஷியாவில் அரசை மாற்றுவதா? ரஷியாவை துண்டாக்குவது தொடர்பாகவும் பேசப்படுகிறது. இது முட்டாள்தனமானது' என்றார்.