சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும் : சாணக்கியன்
வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் தவறானவர்களைத் தெரிவுசெய்து மக்கள் தாம் செய்த தவறினை நிவர்த்தி செய்வதற்கான முதலாவது சந்தர்ப்பமாக இந்த தேர்தல் இருக்கின்றது.
ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திற்கும் இந்த பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு இந்த தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக எமக்கு அமைந்திருக்கின்றது. வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் மக்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.