இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் ; எம்.ஏ.சுமந்திரன்
இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது. அரசு கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செய்யப்படவில்லை, அந்த நேரத்திலேயே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.
அரசு கூலிப்படையாக செயல்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி. அவ்வாறானனவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.
சம்பந்தன் யார் நான் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் ஒரு காலமும் எங்களுக்காக போராடியவர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அல்ல, சந்தி சந்தியாக நின்று முகத்தில் சாக்கை போற்றி வைத்துக் கொண்டு தலையாட்டி காட்டி கொடுத்தவர்கள் அல்ல. அவர்களில் ஒரு தலைவருக்கு பழக்க தோஷமாக போய்விட்டது இப்போது கூட்டத்திலும் தலை ஆடிக்கொண்டே இருக்கின்றது அது தலையாட்டிய பழக்கம்.
1980 ஆம் ஆண்டு இதனைச் சாதித்தோம், 1985இல் இதனைச் சாதித்தோம் 1987இல், 1989இல், 1994இல் 2001இல் 2004இல் இதனைச் தாதித்தோம் என வரலாற்றுப் பட்டியலிடுகின்றார். அதே பட்டியலில் எத்தனையாம் ஆண்டுகளில் யாரைப் போட்டுத் தள்ளினோம், எத்தனையாம் ஆண்டு அரச கூலிப்படையாக சேர்ந்து இயங்கினோம் என்பதனைக் கூற மறந்துவிட்டார்.
எங்கள் இருவருடைய சரித்திரத்தையும் நன்றாக துலாவி பார்க்கலாம் எந்த தருணத்திலையும் யாரையும் நாங்கள் காட்டிக் கொடுத்தோமா? அரசு கூலிப்படையாக செய்யப்பட்டோமா? என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என தெரிவித்தார்.