இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு - அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனிடையே, மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடந்த செவ்வாய்கிழமை அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த 21 வயது பாலஸ்தீனியர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
மேற்கு கரையில் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில் அந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்த நபர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் 13 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலிய தந்தை , மகன் படுகாயமடைந்தனர். இந்த சம்பவங்களால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பாதுகாப்பிற்காக இஸ்ரேலியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கும் நடைமுறை சுலபமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்யவும், இஸ்ரேலியர்களுக்கு துப்பாக்கி உரிமத்தை வழங்குவதை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களின் வீடுகள் கண்டறியப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் அந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். அதேபோல், பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு நன்மைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெருசலேம், மேற்குகரையில் வசித்து வரும் இஸ்ரேலியர்களின் வலிமையை புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நெதன்யாகு உறுதியளித்துள்ளார். இதனால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.