கியூபா சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டி பிறந்த தினம்
லத்தீன் அமெரிக்க இலக்கியவாதியும், கியூபாவின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான ஜோஸ் மார்ட்டி, கடந்த 1853-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி கியூபாவில் உள்ள ஹவானா நகரில் பிறந்தார். தனது எழுத்துக்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் கியூபாவில் ஸ்பானிஷ் காலணி ஆதிக்கத்திற்கு எதிராக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
இவர் எழுதிய கவிதைகளும், புரட்சிக் கட்டுரைகளும் கியூப விடுதலைக்காக போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தன. இதனால் மார்ட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஸ்பெயின் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் 1877-ல் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு, வேறு பெயரில் கியூபா சென்ற மார்ட்டி, தொடர்ந்து கியூப விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுத்து வந்தார். கியூப புரட்சிப் படையுடன் சேர்ந்து ஸ்பெயின் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை வழிநடத்தினார்.
இறுதியாக 1895-ம் ஆண்டு மே 19-ம் தேதி டாஸ் ரியோஸ் போரில் ஸ்பெயின் படைகளால் மார்ட்டி கொல்லப்பட்டார். இன்று வரை கியூபாவின் மக்களால் ஜோஷ் மார்ட்டி ஒரு தேசிய நாயகனாக கொண்டாட்டப்பட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் ஜோஷ் மார்ட்டியின் 170-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். கியூபாவின் அதிபர் மிகுவல் டயஸ், 91 வயதான முன்னாள் அதிபர் ரால் கேஸ்ட்ரோ உள்ளிட்டோர் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஹவானா நகரில் அணிவகுத்து ஜோஸ் மார்ட்டிக்கு மரியாதை செலுத்தினர்.