பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற தமிழச்சி தங்கபாண்டியன்
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக சார்ஜாவில் நடைபெற்ற அமீரக நாடுகளின் பல்துறை ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஓமன் நாட்டிற்குச் சென்ற அவர், அந்நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்றார். இது ஓமனில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும். அங்கு செல்லும் ஆண்களும், பெண்களும் அங்குள்ள பாரம்பரிய வழக்கத்தின்படி உடைகளை அணிய வேண்டியது அவசியமாகும். அதன்படி தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்றார். அங்குள்ள முக்கியமான இடங்களை பார்வையிட்ட அவர், இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.