5வது நாளாக போராட்டத்தை தொடரும் ஆசிரியர்கள்
கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ம் தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும், முதல் அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால், 5வது நாளாக ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.