டுபாய் சுத்தா கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆட்களை இணைத்துக்கொள்ள சட்ட ரீதியிலான அனுமதி இல்லாமல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தை மீறி, சமூக வலைத்தளம் ஊடாக ஆட்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இணைத்துக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டுக்காக நிஸ்ஸங்க பிரியதர்ஷன எனும் டுபாய் சுத்தா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் நேற்று புதன்கிழமை (டிச 28) கைதுசெய்யப்பட்டு, கடுவலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஆட்களை இணைத்துக்கொள்வதாக சமூகவலைத்தளம் ஊடாக அறிவிப்பு செய்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அது தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர், கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை விசாரித்த நீதிமன்றம் , இரண்டு இலட்சம் ரூபா அடிப்படையில் இரண்டு சரீரப்பிணையில் சந்தேக நபரை விடுவித்ததுடன் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தல் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.