எல்லையை திறக்கும் சீனா; வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாயன்று, ஜனவரி 8, 2023 முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை கொண்டுவரப் போவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்குள் நுழையும் நபர்களுக்கு நியூக்ளிக் அமில சோதனைகள் இனி மேற்கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது.
தனது எல்லைகளை அடுத்த மாதம் மீண்டும் திறப்பதாக சீன அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள், வெளிநாட்டு பயணத்துக்காக டிக்கெட்டுகளை அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
வெளிநாடு செல்ல விரும்பும் சீன குடிமக்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஜனவரி 8-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என குடியேற்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கடைபிடிக்கப்பட்ட கடுமையான தனிமைப்படுத்துதல் முறைகள் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கைவிடப்படுவதாக கடந்த திங்களன்று வெளியான அறிவிப்புக்கு பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, டிக்கெட்களை முன்பதிவு செய்யும் தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதுதொடர்பாக அந்நாட்டு அரசிடம் வெளிப்படை தன்மை இல்லாதது ஆகியவற்றை கருத்தில்கொண்டு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.