ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு: கட்டாயப்படுத்துவது ஏன்? சீமான் கேள்வி
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இது குறித்து தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருப்பதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினைப்போல திமுக அரசும் மக்களின் தகவல்களை ஒவ்வொன்றாக ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டாயப்படுத்துவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணையும் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதால், அவர்கள் வீடு மாறும்போது மீண்டும் இணைப்பு எண்ணை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமே? அப்படியானால் ஒவ்வொரு முறையும் வீடு மாற்றி, வேறு வீடு தேடி அலையும்போது, ஆதார் அட்டையில் மின் இணைப்பு எண்ணை மாற்றவும் அலையவேண்டுமா? வாடகைதாரர்களின் ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால், எதிர்காலத்தில் வீடு வாடகைதாரர்களுக்கே சொந்தமானதற்கான ஆதாரமாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுமோ என்ற வீட்டு உரிமையாளர்களின் அச்சமும் நியாயமானதே.
இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? வாடகை குடியிருப்புகளுக்கு இனி வணிக மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பால், வாடகை வீட்டில் குடியிருப்போர் மேலும் அதிக பொருளாதாரச் சிக்கலுக்கு உள்ளாவார்கள். வாடகை செலுத்தவே சிரமப்படும் ஏழை, நடுத்தர மக்களால், பல மடங்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்? தமிழ்நாடு அரசு அனைத்து மின்நுகர்வோரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டுமென்ற உத்தரவினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.