விமானிகள் ராஜினாமா - அதிர்ச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையின் அரசியல் சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் இலங்கை அரசின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி, டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் தங்கள் பணிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு 318 விமானிகள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 235 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வரும் நிலையில் சுற்றுலாவை முக்கிய வருமானமாக கொண்ட இலங்கைக்கு இப்போதுதான் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விமானிகளின் ராஜினாமாவால் அதிகமான விமானங்களை இயக்க முடியாமல் போவது மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.