சவுக்கு சங்கர் மேலும் 4 வழக்குகளில் கைது
பிரபல யூட்யூபராகவும், பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் யூட்யூப் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதுகுறித்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்றம் தானாகவே வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து மதுரை உயர்நீதிமன்றகிளை சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று வந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவரின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு சம்மந்தமாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்த விதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு சவுக்கு சங்கர் மீது பதிவான 3 வழக்குகளிலும், 2021 ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸின் சைபர் கிரைம் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு, அதிமுக ஆட்சியின் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.