அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் : சம்பிக்க ரணவக்க
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் அடக்குமுறை மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும்.
அது அரசாங்கத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும்.அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நாணய நிதியத்தின் ஒத்தழைப்பை பெற்றுக்கொள்வது சந்தேகத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பொறுப்பற்ற தன்மையில் செயற்பட்டால் நாட்டு மக்கள் எவ்விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள்.மக்கள் போராட்டம் தீவிரமடையும்,அது அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல பொருளாதாரத்திற்கும் தாக்கம் செலுத்தும்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மூன்று மாத காலத்திற்குள் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டி,நிறைவேற்று குழுவுடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு அரசாங்கம் செல்லும் என நம்பிக்கை கொள்ள முடியாது.சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்தக்கட்ட திட்டத்தை அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.