இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதற்கும் சவூதி அரேபியா சம்மதம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அஹ்மட் பின் சுலைமான் அல்ராஜி ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஆட்சேர்ப்புக்காக இரண்டு இருதரப்பு குழுக்களை நியமிப்பதற்கும், வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவை நியமிப்பதற்கும் அமைச்சர் அல்ராஜி முன்மொழிந்தார்.இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் அதிகரிக்க அமைச்சர் அல்ராஜி ஒப்புக்கொண்டார், இது தொடர்பான பரிந்துரைகள் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.சவூதியில் பெரும்பான்மையான இலங்கைப் பணியாளர்களைக் கொண்ட துறைகள் மீது கவனம் செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டதுடன், அரபு மற்றும் ஆங்கிலத்தில் மாத்திரமே இருக்கும் சேவை ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து 30 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.