பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் எனது வலது காலில் 3 குண்டுகள் பாய்ந்தன - இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இம்ரான்கானுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
"எனது வலது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர். இடது காலில் சில துண்டுகள் இருந்தன. அதை அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள். என்னை கொல்ல சதி நடந்தது பற்றி புலனாய்வு அமைப்புகள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. மூன்றரை ஆண்டுகள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகள், பல்வேறு அமைப்புகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. எனக்கு எதிராக கொலை சதி இரண்டு மாதங்களுக்கு முன்பே உருவானது. இது நான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது தொடங்கியது. அன்று முதல் எனது கட்சி உடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக எனது கட்சிக்கு மகத்தான ஆதரவு கிடைத்தது" என்றும் இம்ரான் கான் கூறினார்.
இதனிடையே, இன்று முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் கூறினர்.