நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணியை தொடருவோம் - இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பைசல் சுல்தான் என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இந்த நிலையில் இம்ரான்கான் லாகூரில் இருந்தவாறே பேசியதாவது:- "நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து செவ்வாய்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான் இங்கிருந்து (லாகூரில்) கொண்டே பேரணியில் உரையாற்றுவேன். எங்கள் பேரணி ராவல்பிண்டியை அடைந்தவுடன், நான் அதில் நேரில் கலந்துகொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன். எங்கள் பேரணி, அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள், ராவல்பிண்டியை வந்தடையும்" என்று கூறினார். இம்ரான் கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என்று அனைத்து ஊடகங்களுக்கும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில் இம்ரான்கானின் பிடிஐ கட்சியின் சமூகவலைதளத்தில் இருந்து இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.